Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 22 ஜூலை (ஹி.ச.)
நெல்லையில் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஸ்பெண்ட் எஸ்ஐ சரவணனுக்கு (52) நீதிபதி ஹேமா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
அரசு சாட்சியை கொல்ல முயன்ற வேறொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே டி சி நகர் பகுதியில் ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுர்ஜித், பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய சஸ்பெண்ட் எஸ்ஐ சரவணன் (52) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவர் தரப்பில் வழக்கறிஞர்களும் ஆஜராகாததால், சரவணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
அப்போது சிபிசிஐடி போலீசார் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதாவது,
சரவணன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை பி.டி. வாரண்ட் மூலம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஐகோர்ட்டில் இடைக்கால தடை உள்ள நிலையில், வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 4ம் தேதிக்கு நீதிபதி ஹேமா தள்ளிவைத்தார்.
மேலும் சுர்ஜித், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகியோரின் நீதிமன்ற காவலை அதுவரை நீட்டித்து உத்தரவிட்டார்.
முன்னதாக சுர்ஜித்தின் தந்தையான சஸ்பெண்ட் சிறப்பு எஸ்ஐ சரவணன் (52), திருப்பூர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கில் முக்கிய அரசு சாட்சியாக உள்ள தாராபுரத்தை சேர்ந்த தங்கவேல் (45) என்பவரை கடந்த 7ம் தேதி காரில் வந்த இருவர் அரிவாளால் வெட்டி தப்பியதாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த கொலை சதிக்கு உடந்தையாக இருந்ததாக நெல்லையைச் சேர்ந்த சஸ்பெண்ட் எஸ்ஐ சரவணன் (52) திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை மற்றும் மகன் அடுத்தடுத்து வெவ்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN