Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 22 ஜூலை (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரிய வகை கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலாஸ், கெந்தளா, காட்டேரி வில்லேஜ், பாரதி நகர், கக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக இந்த கொசுக்கள் அதிக அளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக காணப்படும் இக்கொசுக்கள், டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் உள்ள உணவுப் பொருட்களின் மீது படர்வதால், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
உலிக்கல் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் உடனடியாக கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, சேலாஸ் கடை வியாபாரிகள் சங்கம் இன்று கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியது.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, உலிக்கல் பேரூராட்சி நிர்வாகம் இன்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் கிஷோர், திருச்செல்வம் மற்றும் கவுன்சிலர் பாஸ்கரன் ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam