பழனி கோயில் நில முறைகேடு வழக்கு - 7வது நாளாக ஆவணங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல், 22 ஜூலை (ஹி.ச.) பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலக
பழனி


திண்டுக்கல், 22 ஜூலை (ஹி.ச.)

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் 7வது நாளாக ஆவணங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல், பழனி மற்றும் பிற மாவட்டங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, முன்னாள் வட்டாட்சியர் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் சிவனேசன் ஆகியோரிடம் சுமார் 6½ மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தின் உரிமை, அதன் பயன்பாடு, கோவில் கட்டுப்பாட்டில் இருந்த நிலம் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மற்றும் மூல பதிவுகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் ஆய்வாளர் சந்தானலட்சுமி தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணைக்கு உதவியாக பழனி முன்னாள் தாசில்தார் பிரசன்னா, தற்போதைய தாசில்தார் சஞ்சய் காந்தி மற்றும் நில அளவையர் செல்லதுரை ஆகியோர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர்.

முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலம் எந்தெந்த காலகட்டங்களில் வருவாய்த் துறையில் எந்த வகைப்பாட்டில் (Land Classification) பதிவாக இருந்தது என்பது தொடர்பான ஆதார ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகளிடம் வழங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P