Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
பயணிகளை டிஜிட்டல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கும் வகையில், இந்திய ரயில்வேயின் ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லா பொதுப் பெட்டி டிக்கெட்டுகளை எடுப்போருக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கட்டண தள்ளுபடி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை ஆறு மாத சோதனை அடிப்படையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இந்த சலுகை காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் பயணிகள் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளில் பணம் செலுத்தினால், டிக்கெட் கட்டணத்தில் உடனடியாக 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இது கேஷ்பேக்காக அல்லாமல் நேரடியாக டிக்கெட் விலையிலேயே கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துவோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் போனஸ் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அந்த திட்டம் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை ரயில் ஒன் செயலிக்கு மட்டுமே பொருந்தும். வேறு எந்த தளத்தில் அல்லது செயலியில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்தாலும் இந்த தள்ளுபடி கிடைக்காது.
தினசரி பயணம் செய்வோர் மற்றும் குறுகிய தூர பயணிகளுக்கு இந்த சலுகை பெரும் பயனளிக்கும்.
கவுண்டர்களில் வரிசையில் நிற்காமல் வீட்டில் இருந்தபடியே சில நொடிகளில் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம், காகிதமில்லா டிக்கெட் என்பதால் எடுத்துச் செல்வது எளிது, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் குறையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b