Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சை, 22 ஜூலை (ஹி.ச)
'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் (20.08.2026) நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், தேசிய தேர்வு முகமையின் (NTA) நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்பியும் தீவிரப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முறைகேடு உள்ளிட்ட குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது எனவும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் அனைவரையும் குண்டு கட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b