Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச)
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு மதுவிலக்கு விதிகளின்படி டாஸ்மாக் பார்களில் புகையிலை பொருட்களான பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள பார்கள் என்பது மது அருந்துவதற்காக மட்டுமே அனுமதிக்கப்பட்ட இடமாகும், அங்கு தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் போன்றவற்றை மட்டுமே விற்க வேண்டும் என்பது விதி. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படாமல், பார்களிலேயே சட்டவிரோதமாக பீடி, சிகரெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டுள்ளது. பார்களில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது முற்றிலும் விதிமீறல் என்றும், ஏற்கனவே உள்ள தடை உத்தரவை அனைத்து பார் உரிமையாளர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி பார்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பார்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b