Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 22 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போட்டி போராட்டத்தால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள காந்தி பவனை முற்றுகையிட முயன்ற தெலங்கானா பாஜக தலைவர் ராம்சந்தர் ராவ் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெலங்கானா பாஜக சார்பில் காந்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாஜக தலைவர் ராம்சந்தர் ராவ், எம்எல்ஏ ராகேஷ் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் காந்தி பவன் நோக்கி செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் பாஜக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராம்சந்தர் ராவ் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, கரீம்நகரில் உள்ள மத்திய அமைச்சர் பண்டி சஞ்சயின் அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றனர்.
அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் இந்த எதிரெதிர் போராட்டங்களால் ஹைதராபாத் மற்றும் கரீம்நகர் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இரு இடங்களிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
ஒரே நாளில் நடைபெற்ற இந்த போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தெலங்கானா அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA