Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TNPDCL), இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள திருமணமான பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு விதிகளில் திருத்தம் செய்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி,
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண் ஊழியர்களுக்கு, பிரசவத்திற்கு முந்தைய ஓய்வு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நலன் தேறுவதற்காக, அவர்களின் விருப்பப்படி மொத்தம் 12 வாரங்கள் (84 நாட்கள்) முழு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.
அதேநேரத்தில், இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் ஏற்கனவே 9 மாதங்களில் (270 நாட்கள்) இருந்து 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மேலும், முதல் பிரசவத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்து, இருவரும் உயிருடன் இருக்கும் நிலையில், அடுத்த பிரசவத்திற்கும் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட விடுப்பு விதிகள் 2026 மார்ச் 13 முதல் அமலுக்கு வந்ததாக கருதப்படும் என்றும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P