Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 22 ஜூலை (ஹி.ச.)
மஞ்சள் உற்பத்தியில் முக்கிய மையமாக விளங்கும் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.14,500 என்ற அளவில் விற்பனையானது.
அதன் பின்னர் படிப்படியாக விலை உயரத் தொடங்கி, கடந்த திங்கட்கிழமை அன்று உச்சமாக ரூ.19,777 வரை எட்டியது. இந்த விலை உயர்வு மஞ்சள் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் விலை சரியத் தொடங்கியுள்ளது. நேற்றைய ஏலத்தில் விரலி மஞ்சள் மற்றும் கிழங்கு மஞ்சள் ரகங்கள் குவிண்டாலுக்கு ரூ.500 வரை குறைந்து ரூ.19,306 என்ற விலைக்கு விற்பனையாகியுள்ளன.
ஒரே நாளில் ஏற்பட்ட இந்த விலைக் குறைவு விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரத்து அதிகரிப்பு மற்றும் வட மாநில வியாபாரிகளின் கொள்முதல் குறைவு போன்ற காரணங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வரும் நாட்களில் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெருமளவிலான மொத்த வியாபாரிகள் ஏற்கனவே கணிசமான அளவு மஞ்சளைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளதால், தற்போதைய சந்தை ஏலத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
நடப்புப் பருவத்தில் நிலவி வரும் போதிய நீர் பற்றாக்குறை, எல் நினோ பாதிப்பு மற்றும் சாகுபடிச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் மஞ்சள் உற்பத்தி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஓரளவுக்கு லாபகரமாக இருந்த மஞ்சள் விலை திடீரெனக் குறைந்து வருவது, தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b