டெல்லி மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் - வேலூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
வேலூர், 22 ஜூலை (ஹி.ச) நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூர தடியடியைக் கண்டித்தும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்ல
டெல்லி மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் - வேலூர் சட்டக் கல்லூரி மாணவர்கள்  போராட்டம்


வேலூர், 22 ஜூலை (ஹி.ச)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூர தடியடியைக் கண்டித்தும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வளாக நுழைவாயில் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு முறைக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் மாணவர் அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டத்தின் போது அமைதியான முறையில் முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மாணவர் சமூகத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரியின் பிரதான நுழைவாயில் முன்பு ஒன்று திரண்டனர். அப்போது மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, நீட் தேர்வை ரத்து செய், ஜனநாயகப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கு போன்ற கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் செயல்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், தடியடி சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்ததால், கல்லூரி நிர்வாகத்தினரும் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b