Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஏராளமான பெண்கள் கோஷங்களை எழுப்பியபடி இன்று காலை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக அப்பகுதியில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்ற நிபந்தனைகள் இன்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே இக்கோரிக்கையை எழுப்புவதற்காக, இக்கூட்டமைப்பினர் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு, தேமுதிக மற்றும் இடதுசாரி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளனர். மேலும், தமிழக சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு குறித்துத் தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்
Hindusthan Samachar / vidya.b