ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்தியது என் பாக்கியம் - கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஷாஹிடி அறிவிப்பு
காபூல் , 22 ஜூலை (ஹி.ச.) ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனினும், ஒருநாள் போட்டிகளில் பேட்டராக தொடர்ந்து அணிக்காக விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்து
A


காபூல் , 22 ஜூலை (ஹி.ச.)

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், ஒருநாள் போட்டிகளில் பேட்டராக தொடர்ந்து அணிக்காக விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷாஹிடி, சுமார் நான்கரை ஆண்டுகளாக அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

அவரது தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சாதனை படைத்தது.

மேலும், 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் அணியை வழிநடத்தினார்.

இதுதொடர்பாக ஷாஹிடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டது என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகும். நேர்மை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், ஒருநாள் போட்டிகளில் பேட்டராக தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்பாக புதிய கேப்டனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA