Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அவர் பெற்ற கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'மன்னர் வகையறா' திரைப்படத் தயாரிப்பிற்காக பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
அந்தத் தொகைக்காக வழங்கப்பட்ட காசோலை, வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் திரும்பி வந்ததாகக் கூறி, கோபி தரப்பில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி விசாரித்தார்.
வழக்கில் விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததுடன், அவர் பெற்ற கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் விமல் தரப்பு கோரிக்கை வைத்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்திற்கு தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam