Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 23 ஜூலை (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தவளேஸ்வரம் மாவட்ட ஊராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி கந்துலா ஜெஸ்ஸி, சர்வதேச விண்வெளி திட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
உலகின் முதல் உலகளாவிய அனைத்து பெண்களும் பங்கேற்கும் லூனார் கியூப்சாட் மிஷனான ‘மிஷன் சக்திஷாட்’ திட்டத்துக்கு ஜெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து செயற்கைக்கோள் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் அவர் ஈடுபட உள்ளார்.
இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து அக்டோபர் 11-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஒரு அரசுப் பள்ளி மாணவி சர்வதேச விண்வெளி முயற்சியில் பங்கேற்பது ஆந்திர மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
மாணவி ஜெஸ்ஸியின் சாதனைக்கு ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது போன்ற சாதனைகள் கல்வித் துறையில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆந்திராவின் ஒரு அரசுப் பள்ளியில் இருந்து சர்வதேச விண்வெளி திட்டம் வரை ஜெஸ்ஸியின் பயணம், கனவு காணும் அனைத்து இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. ஜெஸ்ஸி ஆந்திரப் பிரதேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவர் சந்திரனையும் தாண்டி புதிய உயரங்களை அடைய வாழ்த்துகள்” என்று அமைச்சர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA