Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 23 ஜூலை (ஹி.ச)
தேனியிலிருந்து சுமார் 54 கி.மீ தொலைவில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகே மேகமலை வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியானது புகழ்பெற்ற சுருளி அருவியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால், இது சின்னச் சுருளி என்றும் அழைக்கப்படுகிறது.
மேகமலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த அருவி, அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே கொட்டுகிறது.
விடியற்காலை மற்றும் அந்திப் பொழுதுகளில் யானைகள், புள்ளிகளான மான்கள் போன்ற வனவிலங்குகள் இங்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அருவிக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு தூண்கள் சேதமடைந்துள்ளன.
இதனை சீரமைக்கும் பணியை கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி சீரமைப்பு பணிகள் முடியும் வரை சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களாக நீடித்து வந்த இந்த தடை இன்று 7-வது நாளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b