Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 23 ஜூலை (ஹி.ச.)
புதுச்சேரியில் சமீப காலமாக போலி மருந்துகள் தயாரிப்பு தொடர்பாக தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருபுவனை உள்ளிட்ட தொழிற்பேட்டை பகுதிகளில் செயல்படும் மருந்து நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வின் போது, மெடிநோக் ஹெல்த் கேர் நிறுவனத்தில் தரமற்ற முறையில், உரிய தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940-ன் கீழ் உரிய ஆய்வக பரிசோதனை அறிக்கை இன்றி மருந்துகள் வெளியிடப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து இருப்புகள் முழுவதும் முடக்கப்பட்டு, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
தரமற்ற மருந்து என உறுதி செய்யப்பட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள மருந்துகள் குறித்து சந்தேகம் இருந்தால் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார் அளிக்கலாம் எனவும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b