நாடு முழுவதும் 1500 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பொறியாளர் கைது
சென்னை, 23 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சங்கர் சுப்பிரமணியன் என்பவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2023 முதல் 2025 வரையிலான கா
நாடு முழுவதும் 1500 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பொறியாளர் கைது


சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சங்கர் சுப்பிரமணியன் என்பவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை இவர் அனுப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2025-ம் ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த மிரட்டல்கள் அனைத்தும் தனது அடையாளத்தை மறைப்பதற்காக Tor உலாவி மற்றும் VPN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை இவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் தமிழ்நாடு பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இவரது கைது நடவடிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இவருக்குப் பின்னால் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b