Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்தச் செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்த பெண் எலி கடித்து கால் விரலை இழந்துள்ள நிலையில், அவருக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்து கொண்டாடி செல்ஃபி பதிவிட்டு வருவதாகவும், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை படம் பார்க்கவே முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நாடும், நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன என்ற மனநிலையுடன் கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய 'நீரோ' அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கு தகுந்த இழப்பீடும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ