பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - டெண்டர் அறிவிப்பு
சென்னை, 23 ஜூலை (ஹி.ச.) தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, இனி பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தி செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - 3 மாநகராட்சிகள், 112 நகராட்சிகளில் உணவு வழங்க டெண்டர் அறிவிப்பு


சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, இனி பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தி செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு காலை உணவு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 3 மாநகராட்சிகள் மற்றும் 112 நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த உணவு வழங்கும் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுப்பதற்கும், அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b