Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச)
காவிரி மேலாண்மை ஆணையத்தால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்றும், காவிரி அணைகளை நேரடியாக கையாளும் அதிகாரத்துடன் புதிய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று கர்நாடகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பினும், பெங்களூரின் குடிநீர் தேவையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க மறுப்பதை மேலாண்மை ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 28.30 டி.எம்.சி. நீரில் பெரும்பகுதி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கர்நாடகம் வழங்க வேண்டிய நீரை வழங்காதபட்சத்தில் நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாததால், தற்போதைய அமைப்பு வெறும் பொம்மை ஆணையம் ஆக செயல்படுகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்டபடி, பக்ரா–பியாஸ் மேலாண்மை வாரியத்தைப் போல அணைகளின் இயக்கம் மற்றும் நீர் திறப்பை நேரடியாக கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ