Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 23 ஜூலை (ஹி.ச)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 74.59 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 74.48 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 36.67 டி.எம்.சி.யாக உள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த ஐந்து நாட்களாக வினாடிக்கு 42 கன அடி என்ற மிகக் குறைந்த அளவிலேயே நீடித்து வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் முடங்கியுள்ளன.
இதனிடையே குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்து, நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரவிருக்கும் நாட்களில் கர்நாடகப் பகுதிகளில் பலத்த மழை பெய்து, அம்மாநில அணைகள் நிரம்பினால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
Hindusthan Samachar / vidya.b