Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியில் இருந்து சுமார் ரூ.6 கோடி ஒதுக்க அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்காத சூழலில், அவர்களது முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு மாற்றுவது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் முக்கியமான திட்டம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றாலும், அந்தத் திட்டத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகும் என்று விமர்சித்துள்ளார்.
எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P