Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஜூலை (ஹி.ச)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விருதுநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவணகுமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த கொள்ளைச் சம்பவத்திற்கான திட்டமிடலில் தவெக நிர்வாகியே முக்கிய மூளையாக செயல்பட்டதாக வெளியாகும் தகவல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.
ஒரு வீட்டை தொடர்ந்து கண்காணித்து, அங்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை கவனித்து, வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருக்கும் நேரத்தில் கொள்ளை நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் நபருக்கு, எந்த அடிப்படையில் கட்சியின் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியில் பொறுப்புகள் வழங்கும் முன், சம்பந்தப்பட்டவர்களின் பின்புலத்தை முறையாக ஆய்வு செய்யாமல் பதவி வழங்கிவிட்டு, பின்னர் குற்ற வழக்கில் சிக்கியதும் கட்சியில் இருந்து நீக்குவது மட்டும் போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக உறுப்பினர் என்ற அடையாளத்தை பயன்படுத்தி இன்னும் எத்தனை குற்றப்பின்னணி கொண்டவர்கள் மக்களிடையே உள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, சட்டம்-ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் முதல்வர் விஜய், முதலில் தனது கட்சிக்குள் உள்ள குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ