நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய–மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் – வி.கே. சசிகலா வலியுறுத்தல்
சென்னை, 23 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும், குறிப்பாக தலைநகர் டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்களை கைது செய்வதும் மிகவும் துரதிருஷ்டவசமானது என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். மாண
Sasikala


Bb


சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும், குறிப்பாக தலைநகர் டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்களை கைது செய்வதும் மிகவும் துரதிருஷ்டவசமானது என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நீட் என்ற அரக்கனை ஒழிக்க இளம் தலைமுறையினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீட் அறிமுகமான பிறகு தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்துவிட்டதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் சேரும் சூழல் உருவாகும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

அவர்கள் படிப்பை முடித்த பிறகு தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதால், எதிர்காலத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

மருத்துவத் துறை என்பது நோயாளிகளின் உயிருடன் தொடர்புடைய துறை என்பதால், மருத்துவம் பயிலும் மாணவர்கள் அந்தந்த மாநில மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் மருத்துவப்படிப்பை முடித்து அரசு பணியில் சேரும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற வேண்டிய நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மொழி தெரிந்த மருத்துவர்களால் மட்டுமே கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி சேர்க்கை தாமதமாக நடைபெறுவதால், மாணவர்கள் தங்களது படிப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு குளறுபடி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள சசிகலா, வெளிப்படைத்தன்மை இல்லாத போட்டித் தேர்வுகள் மாணவர்களின் வாழ்நாள் கனவுகளையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன என்று தெரிவித்துள்ளார். இதனால்தான் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அவர் இன்று இருந்திருந்தால் நீட் தமிழகத்தில் அமலுக்கு வந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக அளித்த வாக்குறுதி நிறைவேறாததால் மாணவர்களும், அவர்களது குடும்பங்களும் ஏமாற்றமடைந்ததாகவும் சசிகலா விமர்சித்துள்ளார். தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, மத்திய அரசுடன் இணைந்து சட்டரீதியான வழிமுறைகளை ஆராய்ந்து, நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, நாட்டின் இளம் தலைமுறையினரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, நீட் விலக்கு பெற தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வி.கே. சசிகலா தனது எக்ஸ் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ