Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிப்பதாகவும், மாணவர்களின் உணர்வுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
2010-ஆம் ஆண்டு மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசே மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்வுக்கு அடித்தளம் அமைத்ததாக தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சி தற்போது நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது அரசியல் கேலிக்கூத்து என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வை அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை காங்கிரஸ் தற்போது ஒப்புக்கொள்கிறதா அல்லது அப்போது எடுத்த முடிவே சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காகவா என்பதை அக்கட்சி விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை ஜனநாயகப் படுகொலை என்று விமர்சிப்பது முரண்பாடான நிலைப்பாடு என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மாணவர்களின் எதிர்கால நலன் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டம், உண்மையில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர மாணவர்களின் நலனை பாதுகாக்கும் போராட்டம் அல்ல என்றும், இதை பொதுமக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P