Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றங்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள்
(Fast-Track Courts) அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
நமது இளைஞர்களின் நலனும், அவர்களின் எதிர்காலமும்தான் எங்களுக்கு மிக முக்கியமானது. வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
இதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியை மேற்கோள் காட்டினார்.
மேலும், பிரதமரின் இந்த வலிமையான உறுதிமொழி மாணவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதோடு, மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்களும் தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
அத்துடன், சாமானிய மக்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கவே நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அரசியல் லாபத்திற்காக அதனை எதிர்மறையாக சித்தரித்து மாணவர்களை திசைதிருப்பும் முயற்சிகளை மாணவர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P