Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பது மட்டும் போதாது; நீட் தேர்வு முறையே முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்லியில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் வட மாநிலங்களுக்கும் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது காவல்துறையை பயன்படுத்தி ஒடுக்குவது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பதாகக் கூறும் தமிழ்நாடு அரசு, அதற்கு எதிராக தன்னெழுச்சியாக நடைபெறும் மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களை அடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதை விமர்சிக்கும் அதே நேரத்தில், தமிழ்நாட்டிலும் நீட் எதிர்ப்பு போராட்டங்களை அடக்க முயல்வது இரட்டை நிலைப்பாடு என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள், குழப்பங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள், அந்தத் தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும், எனவே முறைகேடுகளை விசாரிப்பதைத் தாண்டி நீட் தேர்வு முறையே ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இல்லாத சூழலில், அனைவருக்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அந்த அடிப்படையில் நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களைவிட, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கும் போராட்டங்களே மாற்றத்தை உருவாக்கும் வலிமை கொண்டவை என்றும், நீட் எதிர்ப்பு அமைதிப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தனது முழு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P