Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 ஜூலை (ஹி.ச.)
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாக தனிநபர்கள் பெயருக்கு பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணையை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை பழனி நகராட்சி மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தாக்கல் செய்திருந்தார்.
மனுவில்,
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய தனிநபர்களுக்கு சுமார் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத் துறை தொடர்ந்த வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்தது. இதையடுத்து, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல்துறையினர் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், கடந்த ஜூலை 15-ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், இந்த வழக்கில் இரண்டு முக்கிய அரசுத் துறைகள் தொடர்புடைய நிலையில், அந்தத் துறைகளின் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரத்தை சாதாரண தவறாக சித்தரித்ததாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, மாநில காவல்துறையின் கீழ் செயல்படும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டால் அது முழுமையான நடுநிலையுடன் இருக்காது என்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், சிபிசிஐடி இதுவரை கைப்பற்றிய ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்களை உடனடியாக பாதுகாத்து சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும், சிபிஐ சுயாதீனமான மற்றும் நேர்மையான விசாரணையை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தொடர்பான வழக்குகளை தாம் விசாரிப்பதில்லை என்று தெரிவித்த நீதிபதி, இந்த மனுவை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் உரிய அமர்வு நீதிபதி முன்பு பட்டியலிடுமாறு உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதன் மூலம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam