Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
டெல்லியில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரியும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ஜந்தர் மந்தர் பகுதியில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களைத் தொடர்ந்தும் இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மெரினா கடற்கரையில் ஒன்று கூட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையும், கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b