ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆகஸ்ட் 6 வரை நீதிமன்றக் காவல்
ராமநாதபுரம், 23 ஜூலை (ஹி.ச.) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வர
Fishermen


ராமநாதபுரம், 23 ஜூலை (ஹி.ச.)

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்ற மீனவர்கள், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையேயான கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 9 மீனவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 9 பேரையும் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே மீண்டும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Hindusthan Samachar / ANANDHAN