மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத மதுவிற்பனை புகார் - கூட்டாய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை, 23 ஜூலை (ஹி.ச.) மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வருவாய்த் துறை, காவல்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்த
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 23 ஜூலை (ஹி.ச.)

மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வருவாய்த் துறை, காவல்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, பத்திரப்பதிவுத் துறை ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனகிரி செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில்,

கடந்த 2025 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாலும், அதனை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகே செயல்படும் பல மனமகிழ் மன்றங்களில் போலி உறுப்பினர் பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் நோக்கத்திற்கு முரணாக வணிக ரீதியில் அவை செயல்படுவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனமகிழ் மன்றங்கள் விதிகளை மீறி உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் மதுபானம் விற்பனை செய்து வருவதாக வாதிட்டார்.

இதையடுத்து, மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி உள்ளது. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு எவ்வாறு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால், மனமகிழ் மன்றங்கள் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, மனுதாரர் குறிப்பிட்டுள்ள 8 மனமகிழ் மன்றங்களில் மதுரை மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் வருவாய் கோட்டாட்சியர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையினர், பத்திரப்பதிவுத் துறையினர், காவல்துறையினர் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam