Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 17.07.2026 அன்று மதுவிலக்கு அமலாக்க சோதனையின்போது, 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அருணாசலம் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனையில் அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவர் சான்றளித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
பின்னர் காவல் நிலைய
லாக்-அப்பில் இருந்தபோது அருணாசலம் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, அவரது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் விடுவித்து, தொடர் மருத்துவப் பரிசோதனைக்காக உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், 23.07.2026 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அருணாசலத்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ