Enter your Email Address to subscribe to our newsletters


தூத்துக்குடி, 23 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அதே நாளில் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அன்புமணி, உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலத்தை காவலர்கள் மூவர் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக அவர் மருத்துவமனையில் அளித்ததாகக் கூறப்படும் காணொலி வாக்குமூலத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமை ஆர்வலர்களும் காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அருணாச்சலம் மயங்கி விழுந்ததால் காயமடைந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்றும் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
ஏற்கனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி சபரிநாதன் உயிரிழந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்காத நிலையில், தற்போது மற்றொரு விசாரணைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டப்படி கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ