Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
எச்.வினோத் இயக்கத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. அனிரூத் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதியே வெளியாக வேண்டி இருந்தது. சென்சார் பிரச்சினை காரணமாக பொங்கலுக்கு வெளியாகாமல் தள்ளிப்போனது. அதன் பிறகு படம் எப்போது வெளியாகும் என்பதற்கான விடை தெரியாமலேயே இருந்து வந்தது.
தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகளும் நடைபெற்று வந்ததால், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக, படத்துக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. அந்த நேரத்தில் இத்திரைப்படம் இணையத்தில் லீக்கானதால் படக்குழுவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விஜய் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதில் சம்பந்தப்பட்ட நபர்களும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார்.
அதன்பின் படம் திரும்பவும் சென்சாருக்கு அனுப்பப்பட்டு ஒரு சில மாற்றங்களுடன் வெளியீட்டுக்குத் தயாரானது. படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இந்த படத்தை திரையில் கண்டுகளிக்க முடியும்.
'தளபதி விஜய்' என்றிருந்த டைட்டில் கார்டு 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்' என்று மாறி இன்று ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.
Hindusthan Samachar / ANANDHAN