Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச)
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பார்சல் சேவை அலுவலகத்தில் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் பார்சல் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எழும்பூர் பகுதியில் உள்ள அந்த தனியார் பார்சல் அலுவலகத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பார்சலில் வந்திருந்த கஞ்சா சாக்லேட்டுகளை பெற்றுச் செல்வதற்காக ராகுல் என்ற இளைஞர் அங்கு வந்துள்ளார். அவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், சென்னை சூளை பகுதியில் தர்மேந்தர் என்பவரை குறிவைத்து போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவரிடம் இருந்து மொத்தம் 726 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா, இதன் பின்னணியில் வெளிமாநில கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b