Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 23 ஜூலை (ஹி.ச)
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த முற்றுகை மற்றும் காத்திருப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன
இப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுவதாகவும், இந்த தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆளுநர் மாளிகை நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஆளுநர் மாளிகை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / vidya.b