Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தும் வகையில் சமூக நீதித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனச்சான்று வழங்குவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, ஆதிதிராவிடர் இனத்தவருக்கு விண்ணப்பம் கிடைத்த இரண்டு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் இனச்சான்றிதழ் வழங்க வேண்டும். அதேபோல், பழங்குடியினத்தவருக்கு ஒரு வாரத்திற்குள் கோட்டாட்சியர் இனச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைத்து Manual for Issuance and Verification of Scheduled Caste/Scheduled Tribe Community Certificates என்ற கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் உரிய முடிவை எடுத்து, அதன் விவரத்தை மனுதாரருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனச்சான்று கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது காலதாமதம் ஏற்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு சமூக நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ