ஆடி அமாவாசை - சதுரகிரி கோவிலுக்கு செல்ல ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி
விருதுநகர், 24 ஜூலை (ஹி.ச.) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13-ந் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் சுமார் 5 லட்
ஆடி அமாவாசை - சதுரகிரி கோவிலுக்கு செல்ல ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13-ந் தேதி வரை  4 நாட்கள் அனுமதி


விருதுநகர், 24 ஜூலை (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13-ந் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தினமும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலை மீது ஏறி இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழித்தடத்தையே பயன்படுத்த வேண்டும்.

அதிக செங்குத்தான மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பாதை மற்றும் தேனி மாவட்டம் வருசநாடு ஆகிய ஆபத்தான வழிகளை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வனப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையடிவார சோதனை சாவடிகளில் போலீசார், வனத்துறையினர் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பக்தர்களின் வசதிக்காக 5 கி.மீ. மலைப்பாதையில் அரை கி.மீ. இடைவெளியில் குடிநீர் தொட்டிகளும், இரவு நேர வெளிச்சத்திற்காக 750-க்கும் மேற்பட்ட சோலார் மற்றும் ஜெனரேட்டர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அன்னதானம் வழங்குவதற்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோணப்பாறை, கோரக்கர் பாறை, சங்கிலிப்பாறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், விஷக்கடி மருந்துகளுடன் கூடிய மருத்துவ முகாம்களும், மலையடிவாரத்தில் அவசர ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க வேண்டும். பின்னர் புதிய பாதை வழியாக சந்தனமகாலிங்க சுவாமியை தரிசித்து இரும்பு பாலத்தின் வலதுபுறமாக வெளியேறும் வகையில் ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து தாணிப்பாறை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இரவு நேரங்களில் மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b