Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 24 ஜூலை (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அமைதியான ஆன்மிக சூழலை ஏற்படுத்தும் வகையில், மலைப்பகுதியில் ‘நோ ஹார்ன்’ விதியை திருமலை திருப்பதி தேவஸ்தானமும், காவல்துறையும் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.
திருமலை மலைப்பாதைகள் மற்றும் கோவில் சுற்றுப்பகுதிகளில் தேவையின்றி வாகன ஹாரன் மற்றும் சைரன் ஒலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறும் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ‘நோ ஹார்ன்’ விதியை மீறிய 42 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.64 ஆயிரத்து 475 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎன்சி டோல்கேட் முதல் இரு மலைச்சாலைகள் உள்ளிட்ட திருமலை முழுவதும் இந்த விதி அமலில் உள்ளது.
பல வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாததால், போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருமலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
விதிமீறல்கள் கேமரா பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அவசர தேவைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் வி.வி.ஐ.பி. பாதுகாப்பு வாகனங்களுக்கு மட்டும் சைரன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமலையின் புனிதத்தையும் அமைதியான சூழலையும் பாதுகாக்க, பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ‘நோ ஹார்ன்’ விதியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA