மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்தால் லோகேசுக்கு மதிப்பெண் குறைந்தது போன்றது- முதல்வர் சந்திரபாபு நாயுடு
ரம்பச்சோடவரம் , 24 ஜூலை (ஹி.ச.) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்தால், அது கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேசுக்கு மதிப்பெண்கள் குறைந்தது போன்றதாகும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அல்லூரி சீதாராம ராஜு மாவ
A


ரம்பச்சோடவரம் , 24 ஜூலை (ஹி.ச.)

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்தால், அது கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேசுக்கு மதிப்பெண்கள் குறைந்தது போன்றதாகும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் ரம்பச்சோடவரத்தில் நடைபெற்ற மெகா பெற்றோர்–ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்,

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைச்சர் லோகேஷ் செயல்பட்டு வருகிறார். அவர் விருப்பத்துடன் கல்வித்துறை பொறுப்பை ஏற்றுள்ளார். அரசு பள்ளிகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன.

அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் இருந்து 1.10 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இது அரசு பள்ளிகளின் தரம் மேம்பட்டு வருவதற்கான சான்றாகும்.

பழங்குடியின பகுதிகளில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள்.

அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் மிகப்பெரிய சாதனைகளை படைப்பார்கள். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ‘போதை வேண்டாம் ப்ரோ’ என்ற விழிப்புணர்வு கையேட்டை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். தொடர்ந்து, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு நன்கொடையாளர்களின் உதவியை பெறும் வகையில் உருவாக்கப்பட்ட ‘படி கோசம்’ நன்கொடை இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இணையதளம் தொடங்கப்பட்ட உடனேயே ரம்பச்சோடவரம் உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையும், நெல்லூர் மாவட்ட ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி நன்கொடையும் அறிவிக்கப்பட்டது.

மாநிலத்தின் நிதி நிலை குறித்து பேசிய சந்திரபாபு, கடந்த ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமையை சமாளித்து வருவதாக தெரிவித்தார்.

நிதி சவால்கள் இருந்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிப்படையான முறையில் இடமாற்றங்கள் நடத்தப்படுவதாகவும் கூறினார். கடந்த ஆட்சியில் டிஎஸ்சி தேர்வு நடத்தப்படவில்லை என்றும், தங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும் மெகா டிஎஸ்சி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்திற்கு கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போகாபுரம் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி ஆகஸ்டு 1-ந் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார்.

மாணவர்கள் நன்றாக படித்தால், அவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

கஞ்சா சாகுபடி முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக தோட்டக்கலைப் பயிர்கள் ஊக்குவிக்கப்படும். ஜி.ஓ. எண்-3 தொடர்பாக பழங்குடியின மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA