எங்கிருந்தாலும் செம்மரக்கட்டைகளை மீட்க வேண்டும் - பவன் கல்யாண் உத்தரவு
அமராவதி , 24 ஜூலை (ஹி.ச) ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டை கடத்தலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும், நாட்டின் எந்த பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரியும், வனத
A


அமராவதி , 24 ஜூலை

(ஹி.ச)

ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டை கடத்தலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும், நாட்டின் எந்த பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரியும், வனத்துறை அமைச்சருமான பவன் கல்யாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமராவதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வனத்துறை உயர் அதிகாரிகளுடன் பவன் கல்யாண் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில் செம்மரக்கட்டை கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண்,

ஆந்திராவுக்கு மட்டுமே சிறப்பான வன வளமாக விளங்கும் செம்மரங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்று தெரிவித்தார்.

செம்மரக்கட்டை கடத்தலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பின்னால் செயல்படும் முக்கிய நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், கடத்தல் கும்பல்களின் வலையமைப்பை வேரோடு அழிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்த ட்ரோன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பிற மாநில காவல்துறை மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்படும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

செம்மரக்கட்டை கடத்தலுக்கு நிதி உதவி செய்யும் நபர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளில் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக 506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,239 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 372 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய கடத்தல் நபர்கள் 12 பேர் மீது பி.டி. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

குஜராத், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 35.6 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் முன்பு 3 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த தண்டனை விகிதம் தற்போது 95 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் வலுவான ஆதாரங்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA