Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி அமுதநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் அருணாச்சலம்(24). இவர் 3-ஆம் மைல் பகுதி அருகே உள்ள ஒரு அரசு மதுபானக்கடையுடன் அமைந்த மதுபான கூடத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர், கடை மூடிய பிறகு சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி காலை, அரசு மதுபானக்கடை மூடியிருந்த நிலையில், அருணாச்சலம் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் என நான்கு பேர், அவரை 120 மதுபாட்டில்களுடன் கைது செய்து, தென்பாகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜர்படுத்தி உடல் தகுதி சான்றும் பெற்றுள்ளனர்.
பின்னர், அவரை நீதிமன்றம் அழைத்து செல்வதற்காக தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் வைக்கப்படும் அறையில், மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்து வைத்திருந்தனர்.
அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, காவல் துறையினர், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, குடும்பத்தினர் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தை காவல் துறையினர் சொந்த ஜாமினில் விடுவித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அருணாச்சலத்திற்கு பின்தலையில் காயம் காரணமாக ரத்த கசிவு அதிகமாக இருந்ததால், கடந்த 21 ஆம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் நேற்று உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு, அருணாச்சலத்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை தாக்கியதால் அருணாச்சலம் மரணம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாலிபர் அருணாச்சலம் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பிணவறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN