Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
சென்னை எழும்பூரில் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, நகை வியாபாரி அன்மோல் ஜெயின் என்பவரிடம் கடந்த 12-ஆம் தேதி 63 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், இந்த மோசடியில் பெரம்பூரைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சாந்தகுமார் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் தடயங்களை சேகரிக்கவும், மோசடி பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியவும், சாந்தகுமாரை போலீசார் காவலில் எடுத்தனர்.
காவலில் எடுக்கப்பட்ட சாந்தகுமாரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கட்டுக்கட்டாக டம்மி ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலி நோட்டுகளை பார்த்த போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.
உண்மையான ரூபாய் நோட்டுகள் போலவே தத்ரூபமாக அச்சடிக்கப்பட்டிருந்த அந்த டம்மி நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுபோன்ற போலி நோட்டுகளை பயன்படுத்தி வேறு யாரிடமாவது மோசடி செய்ய திட்டமிட்டிருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b