Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இன்று காலை 8.30 மணியளவில் கல்லூரி நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாணவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் பேரணியாக சென்று, நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தையும் தொடங்கினர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது. நிலைமையை கண்காணிக்க காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ