குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
தென்காசி, 24 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி மீண்டும் களைகட்டியுள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குற்றாலம் மெயின் அ
Courtallam Falls


தென்காசி, 24 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி மீண்டும் களைகட்டியுள்ளது.

இதனால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து முக்கிய அருவிகளிலும் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.

குடும்பத்தினருடன் வந்துள்ள பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்வதோடு, குற்றாலத்தின் இயற்கை சூழலை ரசித்து நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்து, குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுகிறது. இருப்பினும், அதையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் உணவகங்கள், பழக்கடைகள், மூலிகை எண்ணெய் விற்பனையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வியாபாரமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என அப்பகுதி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN