விவசாய மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க உத்தரவு - மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தல்
சென்னை, 24 ஜூலை (ஹி.ச) தமிழகத்தில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள விவசாய மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை முறையாக கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு, அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்த
Eb


சென்னை, 24 ஜூலை (ஹி.ச)

தமிழகத்தில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள விவசாய மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை முறையாக கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு, அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், பழைய விவசாய மின் இணைப்புகளில் பெரும்பாலானவற்றில் மீட்டர்கள் பொருத்தப்படாமல் இருந்தன.

ஆனால், மின் பயன்பாடு மற்றும் மின் இழப்பை துல்லியமாக கணக்கிட மீட்டர் அவசியம் என்பதால், 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, புதிய விவசாய மின் இணைப்புகள் அனைத்தும் மீட்டருடன் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

ஏற்கனவே உள்ள இணைப்புகளிலும் படிப்படியாக மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் (TNERC), விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் போது கட்டாயம் மீட்டர் பொருத்த வேண்டும் என்று மின் வாரியத்திற்கு அறிவுறுத்தியது.

இதன்படி, மாநிலம் முழுவதும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள விவசாய மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மீட்டர் பொருத்தப்பட்டுள்ள மொத்த விவசாய மின் இணைப்புகளில் குறைந்தது 15 சதவீத இணைப்புகளின் மின் பயன்பாட்டை மாதந்தோறும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 23.96 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. அவற்றில் 4.72 லட்சம் இணைப்புகளில் மட்டும் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி நிலையத்திலிருந்து நுகர்வோருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் போது ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான மின் இழப்புகளை துல்லியமாக கணக்கிடவும், விவசாய மின் பயன்பாட்டை மதிப்பிடவும் இந்த கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஜூன் 2026 மாத மதிப்பீட்டு நிலை அறிக்கையின்படி, மாநில அளவில் இந்தப் பணிகள் 9.99 சதவீத முன்னேற்றம் மட்டுமே எட்டியுள்ளன.

பல மின் வட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட 15 சதவீத இலக்கு இன்னும் எட்டப்படாததால், அந்த இலக்கை விரைவாக நிறைவேற்ற மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின் வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, விவசாய மின் பயன்பாட்டை அறிவியல் அடிப்படையில் மதிப்பிடவும், மின் இழப்புகளை குறைக்கவும், மின்விநியோக திட்டமிடலை மேலும் மேம்படுத்தவும் உதவும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ