Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் விவசாய வணிகத் தொழில் மற்றும் சேவைகள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற 'தமிழர் 4.0' உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிக உச்சி மாநாட்டை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
முதல்வர் விஜய் சரியான பாதையில் பயணித்து வருகிறார். அவரது தலைமையில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார் என்றார்.
மேலும், 'ஜனநாயகன்' திரைப்படத்தை முதல் நாளே பார்த்துவிட்டேன். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய படம் அது. ஜாதி, மதத்தின் பெயரில் மக்களை யார் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்பதையும், ஒரு முழுமையான மனிதன் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதையும் இந்த படம் எடுத்துரைக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தை தற்போது 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தியிருப்பது முதல்வர் விஜயின் மக்கள் நல எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.
மேலும், தொழில் முனைவோரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும், சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.சி.டி. பிரபாகரிடம், நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல், நாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளையே கேட்க வேண்டும்.
வேறு பிரச்சினைகள் குறித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கேள்வி எழுப்புவது சரியான நடைமுறை அல்ல என்றார்.
மேலும், ஜனநாயகன் படம் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் படமல்ல. மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றும் சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ