Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 24 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை பரபரப்பான சம்பவம் நடைபெற்றது.
கொடைக்கானல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் தங்கபாண்டி என்பவர், கையில் வலி இருப்பதாக கூறி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுவதால், செவிலியர் சிகிச்சை அளிக்க மறுத்ததாக தகவல்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, மருத்துவமனையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், நோயாளிகளின் வருகைப் பதிவேடுகள், சிகிச்சைப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கிழித்து எறிந்ததுடன், கணினி மற்றும் மருத்துவ உபகரணங்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்த செவிலியர்கள் அச்சத்தில் வெளியேறினர்.
மேலும், மருத்துவர் அமரும் இருக்கையில் அமர்ந்து தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தங்கபாண்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகம் புகார் அளிக்கத் தயாராகி உள்ளது.
மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam