மாம்பழ சாகுபடியில் நஷ்டம் - மாமரங்களை வெட்டி விற்கும் விவசாயிகள்
தஞ்சாவூர், 24 ஜூலை (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம், அண்டக்குடையான், கிருஷ்ணாபுரம், மலையப்பநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமார் அரை நூற்றூண்
Mangoes


தஞ்சாவூர், 24 ஜூலை (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம், அண்டக்குடையான், கிருஷ்ணாபுரம், மலையப்பநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது.

சுமார் அரை நூற்றூண்டிற்கும் மேலாக மாம்பழ சாகுபடியை இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை இங்கு விளையும் மாம்பழங்ளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. விவசாயிகளும் நிம்மதியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மாம்பழ விளைச்சல் நன்றாக இருந்த போதிலும், அதற்குரிய நியாயமான விலை கிடைப்பதில்லை.

இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதோடு, நாளுக்கு நாள் தங்கள் மிகப்பெரிய பொருளாதார சறுக்கலையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆயிரம் ஏக்கரில் சுமார் 30 ஆயிரம் மா மரங்கள் உள்ளன. தற்போது மாங்காய்களை பறிக்க, ஒருநாள் கூலியாக தொழிலாளி ஒருவருக்கு ரூ.1,500 வரை கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால், மாங்காய் கொள்முதலாக கிலோ ஒன்றுக்கு ரூ. 5 முதல் 8 வரை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

இதனால் மா விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், மாமரங்களை குத்தகை எடுக்கவும் இப்போது யாரும் தயாராக இல்லை.

தோட்டக்காரர்களே கூலி ஆட்களை நியமித்து, மாங்காய்களை பறித்து சுயமாக விற்கலாம் என்றால், பறிக்கும் கூலிக்கு கூட மாங்காய்க்கு விலை கிடைப்பதில்லை என்பதே பரிதாபமான உண்மை.

இதனால் கூலிக்கு அஞ்சி, காய்களை மரத்திலேயே விட்டு விட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவை மரத்திலேயே பழுத்து, அழுகி கீழே விழுந்து கொண்டிருக்கிறது.

வழக்கமாக வெளி மாவட்ட, வெளி மாநில மாங்காய் வணிகர்களும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல் நத்தம் போன்ற இடங்களில் மாங்காய் குறைவான விலைக்கும் கிடைப்பதால், அவர்களும் இங்கு வந்து கொள்முதல் செய்ய விரும்புவதில்லை.

மேலும், அந்த மாவட்டங்களில் கல்தாரி ரசாயன உரத்தை பயன்படுத்தி மாங்காய்களை பழுக்க வைப்பதால் அங்கு மாம்பழ விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே கும்பகோணம் வந்து யாரும் மாம்பழங்களை கொள்முதல் செய்ய வருவதில்லை.

இதனால் இந்த விவசாயிகள் வேறு வழியின்றி, மாமரங்களை அடியோடு வெட்டி, விறகுக்காக லாரிகளில் துண்டு போட்டு ஏற்றுவது காண்பதற்கே பரிதாபமாக உள்ளது.

எனவே இயற்கைக்கு மாறான ரசாயன உரமான கல்தாரினை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை மத்திய மாநில அரசுகள் நிர்ணயம் செய்து அறிவித்திட வேண்டும்.

கும்பகோணம் மாநகரை மையப்படுத்தி, மாம்பழ சாறு உற்பத்தி மையம், மாம்பழ குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் என இப்பகுதி மா விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN