Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 ஜூலை (ஹி.ச.)
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடக இடையேயான நீண்டகால பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியாக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாததால், அது திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை அமைக்கும் திட்டத்தை நீண்டகாலமாக முன்னெடுத்து வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதும், மின்சார உற்பத்தியை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால், இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வரத்து பாதிக்கப்படும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களின் பாசன விவசாயம் கடுமையாகச் சிக்கலுக்கு உள்ளாகும் என்று தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேகதாது அணைத் திட்டத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஏற்கனவே சட்டரீதியான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து சட்ட அம்சங்களையும் ஆய்வு செய்து, தேவையானால் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சட்ட நிபுணர்களுடன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில், இரு மாநில முதல்வர்களும் நேரில் சந்தித்து பேசுவது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், மேகதாது அணைத் திட்டம் குறித்து இரு மாநிலங்களும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இந்தச் சந்திப்பில் உடனடி தீர்வு எட்டப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், நீண்டகாலமாக நீடித்து வரும் காவிரி பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கான புதிய வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P